Saturday, December 10, 2011

ஏ.ஆர். முருகதாஸின் ஏழாம் அறிவும்-கால வேதாளத்தின் ஏழு கேள்விகளும் - தங்கவேலன்.


தமிழர்கள் இனிமேல் கர்வம் கொள்ளலாம் என்ற கர்வ முழக்கத்துடன் தனது ஏழாம் அறிவைக் காண்பித்திருக்கிறார் .ஆர். முருகதாஸ். போதிதர்மர் ஒரு தமிழர் என்கிற காரணத்தால் தமிழரும், வரலாற்றின் இருளடுக்குகளில் சிக்கிக் கிடந்த போதிதர்மரைத் துழழவியெடுத்து நிகழ்கால வெளிச்சத்தில் நிறுத்திய காரணத்தால் முருகதாஸீம் பெருமித மகுடம் சூடிக் கொள்ளலாம் என்பது பொருள். இந்தப் பெருமித மகுடத்தை எவர் சூடிக் கொள்வதாக இருந்தாலும், கால வேதாளத்தின் கேள்விகளுக்கு விடையளித்த பின்னரே சாத்தியம்.
1. முருகதாஸின் தமிழரும், முருகதாஸ் தமிழரும் பெருமிதம் கொள்வதற்கான தகுநிலையுடன் ஏழாம் அறிவு படைப்புரு கொண்டிருக்கிறதா?
2. ஏழாம் அறிவு, வரலாற்றுத் திரைப்படமா? வரலாற்றுத் திரைப்படம் என்றால் என்ன?
3. இப்பொழுது தமிழில் குபுக்கென மேலெழும்பி இருக்கும் வரலாற்றுத் திரைப்பட உருவாக்கம் என்கிற போக்கின் மூலம் எது? இந்த போக்கின் நோக்கம் என்ன? இந்தப் போக்கின் விளைவு என்னவாக இருக்கும்?
4. ஒரு தேசிய இனத்தின் நிலத்தில் படைப்புரு கொள்ளும் வரலாற்றுத் திரைப்படம் இரண்ட தேசிய இனங்களுக்குப் பொதுவான, அல்லது பல தேசிய இனங்களுக்குப் பொதுவான படைப்பாக அமைந்துவிட முடியுமா? (ஏழாம் அறிவு ஆந்திராவில் தெலுங்கு பேசுகிறது. தமிழ்ப் பெருமையைப் பேசுமா?)
5. குடும்பப் படம், காதல் படம், நகைச்சுவைப் படம், திகில் படம், சாகஸப் படம் ....... இவ்வகைப் படங்களை எடுப்பதற்கான படைப்புலக ஜனநாய உரிமை யாவர்க்கும் உண்டு என்பது போல, வரலாற்றுத் திரைப்படம் எடுப்பதற்கான படைப்புலக ஜனநாயக உரிமை யாவர்க்கும் உண்டா?
6. ஏழாம் அறிவு என்றால் என்ன? (சன் தொலைக்காட்சியில்டி.என்.என்று விடையளித்திருக்கிறார் முருகதாஸ்) ஏழாம் அறிவுக்கும் போதி தர்மருக்கும் என்ன தொடர்பு? ஏழாம் அறிவுக்கும் முருகதாஸீக்கும் என்ன தொடர்பு?
7. கடந்த காலத்தில் கனவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்பட்டு வந்த திரைப்படத் தொழிலை, பொழுதுபோக்குத் தொழில் துறை (Entertainment Industry) என்று சுட்டுகிறது உலகமயமாக்கல். இரும்பு வணிகத்தை முதன்மையாகக் கொண்ட லஷ்மி மிட்டல் போன்ற அசுர முதலாளிகளும்பொழுது போக்குத் தொழில் துறைக்குள்நுழைந்து தத்தம் வியூகத்தின்படி காய்கள் நகர்த்தி விளையாடும் சதுரங்க ஆட்டத்தில் .ஆர். முருகதாஸ் என்கிற தமிழர் எவருடைய காய்? இந்தக் காயை நகர்த்தி ஆடும் மாயக்கரம் எது?
மேற்கண்ட ஏழு கேள்விகளை விடுத்திருக்கிறது கால வேதாளம். கால வேதாளத்தின் தொழில் புதிர்களைப் போடுவதும், புதிர்களை அவிழ்ப்பதும், புதிருக்கு நியாயமான விடை சொன்னவர்க்குப் பரிசளிப்பதும், அல்லாதவர்க்கு தண்டனையளிப்பதும்...... ஒரு பொழுதும் ஓயாது தொழில் புரியும் கால வேதாளம் எதையும் விட்டு வைத்ததில்லை; எவரையும் விட்டு வைத்ததில்லை. ஏனெனில், கால வேதாளம் அறத்தின் பேரரசன்.
போதிதர்மர் எங்கள் தமிழர்என்ற பெருமித மகுடத்தை எவர் சூடிக் கொள்வதாக இருந்தாலும், கால
வேதாளத்தின் கேள்விகளுக்கு நியாயமான விடை சொல்ல வேண்டும். சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யர்கள் இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லி விட்டு முப்பத்தியிரண்டு படிகள் ஏறி சிம்மாசனத்தில் அமர்ந்து மகுடம் சூடிக்கொள்ளலாம். நியாயமான விடை சொன்னவரின் தலைக்கு மகுடம். அல்லாதவர்க்கு என்ன நடக்கும் என்பதை பட்டி விக்ரமாதித்யன் கதை தெரிந்தோர் அறிவர்.
வேதாளத்தின் கேள்வி ஒன்று:
முருகதாஸின் தமிழரும், முருகதாஸ் தமிழரும் பெருமிதம் கொள்வதற்கான தகுநிலையுடன் ஏழாம் அறிவு படைப்புரு கொண்டிருக்கிறதா?
முருகதாஸின் பிரகடனத்திலிருந்து துவக்குவோம். கர்வம். போதிதர்மர் எங்களவர் என்று தமிழர் கர்வம் கொள்ளலாம். போதிதர்மருக்கு உயிரூட்டியதால் முருகதாஸ் கர்வம் கொள்ளலாம்.... என்பது பொருள். போதி தர்மரால் சீனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மகாயானப் பிரிவின் பிரம்மஜால சூத்திரங்களுள் ஒன்று., ‘தன்னைப் போற்றிப் பிறரைச் சிறுமைப்படுத்தாதிருத்தல்’,
போதிதர்மர் தமிழர் இனம்என்று மார்தட்டிக் கொள்ளும் அகந்தை, பிற இனங்களைச் சிறுமைப் படுத்துகிறது. இது போன்ற சிறுமைத் தனங்களிலிருந்து விடுபட்ட துறவி போதிதர்மர். போதி என்பது பௌத்த நிலை. பௌத்தம் என்பது அகந்தை அழிந்து, எண்ணங்களகன்று, காலம் கரைந்து அடையாம் ஏதுமற்ற ஆற்றலின் பூரண விழிப்பு நிலை. அந்நிலையில் ஏது தமிழன், தெலுங்கன், மராட்டியன்....? தன்மயம் அறுத்துப் பிரபஞ்சப் பேராற்றலுக்குள் தன்னைக் கரைத்துக் கொண்ட பேராளுமை அவர். அத்தகு ஆற்றலைத் தமிழ்க் குப்பிக்குள் அடைத்து மினுமினு லேபிள் ஒட்டித் தெரு யாவாரி போல்இவர் எங்க ஆள்.... இவர் எங்க ஆள்என்று கூச்சலிட்டுப் போகிறவருக்கு போதிதர்மரின் மூல ஆற்றல் எப்படி விளங்கும். பிரபஞ்ச ஆற்றலை ஒரு சின்னக் குப்பிக்குள் அடைத்துத் தனதாக்கிக் கொள்ள முடியாது என்கிற அளவிற்காவது ஒரு பேஸிக் காமன் ஸென்ஸ் வேண்டாமா?., ஸெவன்த் ஸென்ஸைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!
துறவியாகப் புறப்பட்டுத் தனது நாட்டெல்லையை நீங்கியவர் போதிதர்மர். மனிதர்களின் அகந்தையும், உடைமைப் பற்றும் போதிதர்மரின் வாழ்க்கையில் விளையாட்டுக் காட்டியபோது மிக நுட்பமாக வாழ்வின் சிக்கல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட எளிய மனிதர் அவர். தன்மயம் அவிந்த நிலையில் பேரண்டத்தின் குழந்தையாகத் தன்னை வரித்துக் கொண்டவரைத் தமிழ்க் குப்பிக்குள் அடைத்துவிட முடியாது.
இன்று உலஎகங்கும் பரவிக் கிடக்கிற குங்ஃபூ கலையின் மூல ஆசான் போதிதர்மராகிய பழந்தமிழர் என்ற வரலாற்று உண்மையைத் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்ததாகச் சொல்லி கர்வம் கொள்கிறார் முருகதாஸ். இப்படி ஒரு மினி மெஸேஜைச் சொல்வதற்குச் சீனா வரை போய்வந்து இரண்டேகால் மணி நேரம் ஓட்டிக் காட்ட வேண்டுமா? பட்டென்று கைபேசி பட்டனைத் தட்டினால் பலநூறு குறுஞ்செய்தி பலவூரும் பறக்குமே! ஒரு முழுநீளத் திரைப்படத்தில் இந்த ஒரு செய்தியைத் தவிர வேறெதுவும் போதிதர்மரின் உயர்வை விளக்குகிறாற்போல் இல்லை.
போதி தர்மர் வாழ்ந்த காலத்தைப் படம் பிடித்திருக்கிறார்கள் முதல் இரண்ட ரீல்களில். மூன்றாவது ரீலில் தற்காலத்துக்குத் தாவி விடுகிறது கதை. பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய போதிதர்மரின் டி.என்.-வைச் சுமந்து திரிகிற அரவிந்தன் அப்படியொரு கேணயனாக வலம் வருகிறான். மொத்தப் படத்தில் எங்கேயுமே போதிதர்மரின் மனோநிலை அறவே இல்லை. பல்லவ நாட்டில் விடைபெற்று சீனாவைச் சென்றடைந்த போதிதர்மரை, துறவுடைக்குள் ஒளிந்திருக்கும் அகந்தையாளனாகத்தான் காண்கிறோம். தன்மயமறுத்த போதிதர்மரின் தன்னடக்கம் இல்லை. கதாபாத்திரத்தின் மனோநிலையை இயக்குநரின் பற்றாக்குறை, போதிதர்மரை ஒரு சாகஸக்காரராக, அகந்தையாளராகச் சித்தரிக்கிறது. முருகதாஸின் மனோநிலையும் பௌத்தஞானியின் மனோநிலையும் வேறானவை. கீழைத்தேய ஞான மரவில் தோண்ந்தெழுந்த தூய கலையுள்ளத்தினால் மட்டுமே இத்தகைய கதாபாத்திரத்தின் மனோநிலையை உய்த்துணர்ந்து உருக்கொடுக்க முடியும். படைப்புலகின் அடிப்படை நியதி இது. அழிவற்ற பேருண்மையின் ஒளியுருவை இருட்கண்களால் கண்டுணர முடியாது.
சீனர்களுக்கு போதிதர்மர் தமிழரின் போர்க் கலையைக் கற்றுக் கொடுக்கும் காட்சி ஹீரோவுக்கான சாகஸக் காட்சியாகத்தான் சித்தரிக்கப்படுகிறது. நோக்கம் என்னவெனில், தமிழர்கள் கர்வம் கொள்ள வேண்டும் என்பதே, இதனடியில் தமிழ் நிலம் சார்ந்த அரசியல் அக்கறை ஏதுமில்லை. ‘நான் தமிழன்என்ற சுயசாப்புப் பற்று தூண்டிவிடப்படுகிறது. ‘தமிழ்ப் பற்றுசந்தைக்கான கச்சாப் பொருளாகக் கையாளப் படுகிறது. போதிதர்மர் போர்க்கலையைக் கற்றுத் தருகிற அந்தக் காட்சியில், போர்க்கலை விதிகளின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் தத்துவப் பார்வை மெல்லிய கீற்றளவிலும் வெளிப்படவில்லை. ஞானம் எய்துவதற்கான வழிமுறைகளுள் ஒன்றாகப் போர்க் கலையைப் பணின்ற, பயிற்றுவித்த தமிழ் மெய்ஞான மரபின் ஆன்மீகத் தாதுக்கள் தட்டுப்படவில்லை. பிறனைத் தோற்கடிப்பதற்கான வித்தை என்ற பொருளில்தான் காட்சியாக விரிகிறது.
ஒரு சண்டைக் காட்சியின் போது போதிதர்மன் எதிரியை உற்று நோக்க, எதிரி உறைந்து விடுகிறான். போர்க் கலையில் கையாளப்படும் அந்த வித்தை நுணுக்கத்தின் பெயர்நோக்கு வர்மம்என்ற தகவலும், நோக்குவர்மம் என்றால் மனோவசியம் என்ற விளக்கமும் இயக்குநரால் வழங்கப்படுகின்றன. கதை தற்காலத்திற்குள் குதித்த பின்னர், அதே நோக்குவர்மத்தைப் பயன்படுத்துகிற சீன வில்லன் பலரையும் மனோவசியம் செய்து கொடுஞ்செயல்கள் புரிகிறான்
உண்மையில் நோக்குவர்மம் என்பது எதிரியைத் தனது கட்டளைப்படி ஆட்டுவிக்கும் மனோவசியம் அல்ல. நோக்குவதையே வர்மமாக - அதாவது தாக்குமுறையாகக் கையாளுதல் என்பதே உட்பொருள். எதிரியை அழிப்பதோ எதிரியைத் தோற்கடிப்பதோ, எதிரியைத் தனது இச்சைக்கு உகந்தபடி ஆட்டுவிப்பதோ அல்ல நோக்குவர்மத்தின் இலக்கு. எதிரியை முடக்குவது மட்டுமே. எப்படி முடக்குவது? பார்வையால்! எதிரியை நோக்குவதன் வழியாக, எதிரியின் எண்ண இயக்கத்தை நிறுத்துவது. எண்ண இயக்கம் நின்ற கணத்தில் மனம் அசைவை நிறுத்திக் கொள்கிறது. எண்ண இயக்கமற்ற மனதுள் - அசைவற்ற மனதுள் - வேர்விட்டு நிற்கும் அகந்தை, தன்மயச் சாற்றினை உறிஞ்ச முடியாமல் அடிவெட்டு விழுந்த மரமென வேரொடு சாயும். எதிரியின் வன்முறைச் செயல்பாடு - அகந்தை- முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. இனிப் போர் இல்லை. இந்தப் போரில் வென்றவர் இலர்; தோற்றவர் இலர். எவரும் வென்றிடாமல், எவரும் தோற்றிடாமல் முடிவுக்கு வருகிறது போர். எவரும் தோற்கவில்லை; போர் தோற்றுவிட்டது. இப்படியாக ஒரு போரை சண்டையை - முடிவுக்குக் கொண்டு வரும் ஆன்மீக வழிமுறையே நோக்குவர்மம். எவனையாவது உற்று நோக்கி, ‘எனக்கு ஆகாதவனைக் கொன்று விட்டு வாஎன்று கட்டையையிடுகிற மனோவசிய வழிமுறையல்ல நோக்குவர்மம். நோக்குவர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் எதிரியை, வர்மப் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் வல்லமையானது, நோக்குவர்மத்தை எவர் பிரயோகித்தாரோ அவரிடமே தங்கியிருக்கிறது. வேறு எவராலும் பிடியிலிருந்து விடுவித்துவிட முடியாது. பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட எதிரி இனி ஒருபோதும் சண்டை மேற்கொள்ள மாட்டான். தானே பெருவலிமை கொண்டவன் என்கிற அகந்தை வெட்டுப்பட்டு விட்டது. நோக்குவதாலேயே ஒருவர் தன்னை முடக்க முடியுமெனில், நோக்குபவர் தன்னைவிட வலிமையானவர் என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் நிற்கும் எதிரி சிறுமைப்படுகிறான். தன்னை வென்ற பேராற்றலிடம் அகந்தை சரணடைகிறது. வென்றவர் தோற்றவரிடம் பரிவு காட்டுகிறார். வெற்றியும், தோல்வியுமற்ற, அகந்தையும் - வன்முறையுமற்ற இயல்வு நிலையில் வாழ்வைத் தரிசிப்பதற்கான ஞானம் போதனையாகச் செலுத்தப்படுகிறது தோல்வியுற்றவருக்குள். இங்கு வென்றவர் குருவாகவும், தோற்றவர் சீடராகவும் தமது உள்ளுறவைத் துவக்க - துவங்குகிறது ஓர் ஆன்மீகப் பயணம். நோக்குவர்மத்தின் தாத்பர்யம் இந்த வகை ஆன்மீக விழிப்புதான். போர்க்கலைப் பயிற்சி முறையின் ஞானச் சிகரத்தில் -ஏழாவது நிலையில்- ஏறி நிற்பவருக்கே நோக்குவர்மம் சித்தியாகும்.
பௌத்தத்தின் வஜ்ராயணம் என்கிற பிரிவில்உபாயம்என்கிற சட்டகத்துள் நோக்குவர்மமும் பொருந்தி நிற்கிறது. உபாயம் என்பது ஒருவரை போதி நிலைக்கு உய்விக்கும் வழிமுறை என்று பொருள் பெறும். போதி நிலை என்பது பௌத்த நிலை. பௌத்த நிலை - மனதின் நிர்வாணம். எண்ணமற்ற, காலமற்ற, தன்மயமற்ற நிலையில் பிரபஞ்சப் பேராற்றலின் ஒழுகுவழியென மனமிருக்கும் நிலை. எவராலும் இந்த நிலையை எய்த முடியும் என்பது மகாயானக் கோட்பாடு. எனவே ஒவ்வொருவரும் தத்தமக்கு ஏற்ற வழிமுறைகளைக் கைக் கொண்டு போதி நிலையை எய்துறலாம். (நிகழ் கணத்தில் இயங்கும் விழிப்பு நிலையே ஞானம் என்பதைத் தனது மூலச் செய்தியாக அறிவித்தவர் ரமண மகரிஷி. ஆனாலும் தன்னை நாடி வரும் பல படித்தரங்களைக் கொண்டவர்களுக்கும், அவரவர்க்குத் தக்க வழி முறைகளைக் கண்டடைந்து, அந்தந்த வழிகளில் திருப்பி விட்டவர்) போர்க்கலையில் ஆற்றல் கொண்டோரை போதி நிலைக்குத் திருப்பி விடும் உபாயமே நோக்குவர்மம்.
நோக்குவர்மத்தை எல்லா எதிரிகள் மீதும் பிரயோகிப்பதில்லை. எதிரிகளில், தகுதி கொண்டோர் மட்டுமே நோக்குவர்மத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அதாவது, போதிநிலையை எய்துவதற்கான ஆற்றலை உள்ளீடாகக் கொண்டிருப்போர் மீதே நோக்குவர்மம் பிரயோகிக்கப்பட வேண்டும். அதற்கான தகுதி - சுயவலிமைப் பெருக்கு கொண்ட அருந்திறன். அவனிடம்தான் பேரகந்தை உருத்திரண்டு நிற்கும். போர்க் கலையில் மேற்கொண்ட தொடர் பயிற்சியாலும், தன்முயற்சியாலும் திறனை வளர்த்துக் கொண்டவனிடம் ததும்பி வழியும் பெருமிதம் திரண்டு பேரகந்தையாக உருக்கொண்டிருக்கிறது. இந்த அகந்தை வலிமை கொண்டு வலிமை கொண்டு உச்ச நிலையை அடையும்போது, எல்லாச் சிக்கல்களுக்கும் மூலவேர் அகந்தையே என்ற பேருண்மை பிடிபடும். தனது அகந்தை தனக்குள் மட்டுமின்றி தனக்குப் புறத்தேயும் பூசலை, பிளவை உண்டு பண்ணுகிறது என்ற எளிய உண்மை உடனடி அனுபவமாக வாய்க்கும் தருணமிது. இத்தகையோர் மீது மட்டுமே நோக்குவர்மம் பிரயோகிக்கப்படலாம். பலவீனமானவர்கள் மீதல்ல. சுயவலிமை எதுவுமற்ற, அருந்திறன் எதுவுமற்ற பலவீனர்களின்தான்உள்ளீடற்றது. அகந்தையின்ஆதிக்கவேட்கை மட்டுமே அந்ததானில்தவித்து விளையாடும். எனவே சுயவலிமையையோ, அருந்திறனை உள்ளீடாகக் கொண்டிராத பலவீனர்கள் மீது நோக்குவர்மத்தைப் பிரயோகிப்பதால், பலவீனர்களுக்குப் பயனொன்றும் இல்லை. பிரயோகத்திற்கு ஆட்பட்டு வர்மப்பிடியில் கட்டுண்ட பலவீனன் வர்மப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அச்சத்தின் காரணமாகத் தெறித்து ஓடுவானே தவிர, உள்ளீடான அருந்திறனும், பெருவலிவும் கொண்டவனைப் போல் சரணாகதி அடைந்துவிட மாட்டான். சரணாகதி அடைந்தவனைத் தான் - அகந்தையிலிருந்து விடுபட்டவனைத் தான் - ஆன்மீக மலர்ச்சிக்குத் தயார்படுத்த முடியும். எனவே நோக்குவர்மத் தாக்குதலுக்குப் பெருவலிமை கொண்டவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படுகிறார்.........இன்னும் படிக்க.... 
www.kaatchippizhai.com

No comments:

Post a Comment