Thursday, December 22, 2011

மயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு

கருத்துரை:
மோனிகா (ஓவியர்), ராஜன்குறை (மானுடவியல் ஆய்வாளர்), ஸ்ரீகுமார் (திரைப்பட விமர்சகர்), சுபகுணராஜன் (ஆசிரியர், காட்சிப்பிழை)
மயக்கம் என்ன திரைப்படம் குறித்து மேஜையை சுற்றி அமர்ந்து உரையாடல் நடக்காவிட்டாலும் ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள், அவர்கள் நண்பர்கள் ஆகியோருக்கிடையே தீவிர கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்தது. அவற்றை ராஜன் குறை தொகுத்து, பிறருடைய ஒப்புதலுடன் இங்கே தருகிறோம். வழக்கமாக இடம்பெறும் ஸ்ரீகுமார், மோனிகா ஆகிய ஆசிரியர் குழுவினரின் கருத்துக்களுடன் சமகால தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான பா.வெங்கடேசனின் கருத்தையும் இங்கே பதிவு செய்கிறோம்.
சுபகுணராஜன்: ‘மயக்கம் என்ன’ தமிழின் ஆகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றில்லை. அதே வேளையில் அது மிகச் சாதாரண படமுமில்லை. இயக்குனர் செல்வராகவன் தொடர்ந்து தமிழ் திரையுலகின் கவனத்திற்குரியவராக இருப்பது, அவர் கதைக் களத்தை, அதன் வடிவை, அதன் இயங்கு தளத்தை தீர்மானிக்கும் முறைமைகளின் மூலமே இந்தத் திரைப்படம் எடுத்துக் கொண்ட கதைக்கரு தீவிரமானது என்றபோதும் அது புதிதானதன்று. கலை நேர்த்தியை அதன் உடனடியான வெற்றிகளும், கேடயங்களும், கொண்டாட்டங்களும் உறுதிப்படுத்துவதில்லை என்றபோதும், கலைஞனின் மனத்தின் அடியாழத்தில் அங்கீகாரத்திற்கான ஒரு சிறிய வேட்கை இருப்பதே இயல்பு. அதொன்றும் படைப்பு நெறிக்கு எதிரானதன்று. படைப்பூக்கமான செயல்பாடுகளின் உத்வேகம் அந்தப் புள்ளியில் நிறைவு கொள்ளலாம். கலையின் உன்னதமான தருணத்தை நோக்கிய பயணத்தில் கலைஞன், சமரசங்களற்ற நிலைப்பாடுகளால் அல்லுறுவதும், நிராகரிப்பின் வலிகளைச் சுமப்பதும் தமிழில் பலமுறை கையாளப்பட்ட கதைக்கருவே. உடனடியாக நினைவுக்கு வருவது கமல்ஹாசன் அவர்களின் ‘சலங்கை ஒலி’ சமரசங்களற்ற நடனக்கலைஞனின் காதலும், தோல்வியும், விரக்தியின் விளைவான குடியும் நட்பின் நேசக்கரமும் இருபடங்களையும் அநேகமாக நெருக்கமாகக் கொண்டு வரும் அம்சங்கள். முப்பதாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கையாளப்பட்டிருக்கும் கதைக்கரு, அன்றைய மாறாத நேசங்களையும், தியாகங்களையும், சமகால உறவு நெறிகளுக்குள் இடம் பெயர்க்க முயன்றிருக்கிறது. ஏற்கனவே  ‘குணா’வை ‘காதல் கொண்டேன்’ ஆக மடைமாற்றியதைப் போல, ‘சலங்கை ஒலி’யின் அடிச்சரடான கலைஞனின் தோல்வியையும், வலியையும் பயன்படுத்தியிருக்கிறார். ஒற்றுமைகள் இந்த அளவில் மட்டுமே.

கார்த்திக்கை ‘ஜீனியஸ்’ எனும் நண்பர்களும், அவனுடைய தங்கையும் அதன் நுட்பமான அர்த்தம் கருதி அதைப் பயன்படுத்துபவர்களில்லை. அவர்களது ‘ஜீனியஸ்’ ஒரு அரைவேக்காட்டுத்தனமான ஒட்ட முடியாத கனவொன்றை துரத்துபவன் மட்டுமே. அவர்களின் ‘ஜீனியஸ்’ என்ற அழைப்பில் ஒரு சின்ன கிண்டலும் சாத்தியமே. ஆனால் தொடர்ந்த ‘ஜீனியஸ்’ என்ற உச்சாடனமே அவனை அதன் தீவிரத்தை நோக்கி நகர்த்திய வாய்ப்புக் கொண்டதாய் இருக்கக்கூடும். சலிப்பான லௌகீகத்திற்கும் உன்னதமான கனவிற்குமான இடைவெளியில் பிடிமானமற்று அலைகிறான் கார்த்தி. நண்பனின் தோழியின் மீதான உடனடி ஈர்ப்பை நிராகரிப்பின் வழி தவிர்க்க எத்தனிப்பதில் துவங்குகிறது அவனது போராட்டம். முறையான பயிற்சிகளற்று ‘நேஷனல் ஜியாக்ரபி’ போன்ற பத்திரிக்கைகளுக்கு நிழற்படம் எடுக்க முடியாது என்ற அறிவுரை அவனை தடை செய்வதில்லை. தொழில்நுட்பமற்ற அவனது நிழற்படத்தைப் பார்த்து ‘இது உனக்குச் சரியா வராது’ எனும்போது அவன் சினந்து கொந்தளிப்பதில்லை. தன் நிழற்படம் சிறந்ததுதான், அது பார்ப்பவர்களுக்குப் புரியவில்லை என்று அவன் ஒரு போதும் வாதிடுவதில்லை. போட்டோகிராபியே எனது ஆதர்சம், மிக மோசமான போட்டோகிராபர் என்றாலும், அதுவாக மட்டுமே இருப்பது மட்டுமே தனது மகிழ்ச்சி என்கிறான். மாதேஷ் கிருஷ்ணசாமி அவனது நிழற்படங்களை நிராகரிக்கும்போதும், அவருக்கு எதிராக ‘இன்னொரு முறை’ நல்லாப் பாருங்க சார்’ என்று இறைஞ்ச மட்டுமே செய்கிறான். பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் யாழினியிடம் முதல் முறையாக கவசங்களற்றவனாக கரைந்து அழுகிறான். யாழினி அந்தப் பின்னிரவின் மெல்லிய ஒளியில் அவனது வாழ்வில் பிரவேசிக்கும்போது அவனது கலை ஆளுமை தனது நிஜமான ‘நொடி’யை கண்டடைகிறது. உடலளவில் அவளை விட்டு விலகி ஓடி வனங்களில் அலையும்போது, அவள் நினைவுகளை சுமந்தபடியே இருக்கும் ‘ஒரு நொடியில்’ தான் அந்த அதி அற்புதம் நிகழ்ந்து விடுகிறது. அற்புதம் கலைப்படைப்பாகவும், காதலாகவும் ஒரே தருணத்தில் நிகழ்ந்து விடுகிறது. மாதேஷின் நிராகரிப்பைத் தொடர்ந்து யாழினியின் அரவணைப்பில் கரைந்து அழும்போது அவனது கலை ஆளுமை அடுத்தப் புள்ளியை அடைகிறது. அவள் தொடர்பில் நடந்த முதல் தோல்வியை எளிதாக எதிர்கொள்பவன், கலை நேர்த்தியின் உன்னத தருணத்தைத் தரிசிக்க பின் நிகழும் அவமதிப்பை தாங்க முடிவதில்லை. அவனுக்குள்ளிருந்த கலை ஆளுமை விழிப்பு கண்டபின் அவனது துடுக்கத்தனம் ஒடுங்கி விடுகிறது. அதற்கு பின்னராக கலைஞனாக வாழும் காலம் முழுதும் கரைந்து அழுவது மட்டுமே அவனுக்குச் சாத்தியமாகிறது. மாதேஷின் துரோகத்தைக்கூட கண்ணீரால் மட்டுமே அவனால் எதிர்கொள்ள முடியும். தோல்வியும், விரக்தியும் அவனுள் இருந்த கலைஞனை செயலிழக்கச் செய்தபின் அவன் வெறும் குடிகி£ரனாகிறான். அவனுள் கலை ஆளுமை அமிழ்த்தி வைத்திருந்த வன்முறைகள் தாண்டவமாடத் துவங்குகிறது.
‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் காவியமான பாத்திரப் படைப்பு யாழினி பாத்திரமே. செல்வராகவனின் செய்நேர்த்தி அற்புதமாக வெளிப்படும் தருணமும் அதுவே. பெண்ணியவாதிகள் மட்டுமல்ல, ஆணாதிக்க நம்பிக்கையாளர்களைக்கூட எரிச்சலடையச் செய்யும் பாடலொன்றைக் கொண்ட திரைப்படத்தில் இவ்வளவு வலிமையான பெண் பாத்திரமொன்று சாத்தியமாகி இருப்பதே அபூர்வம். அந்தப் பாத்திரமும் தனக்கெதிரான வன்முறைகளை சகித்துக் கொண்டிருந்துவிட்டு, கருவிலேயே கரைந்து போன குழந்தைக்காக அவனை மௌனத்தில் தண்டிப்பது, ஒரு ஆண் பார்வையில் உருவாக்கப்பட்ட ஒன்று தான். ஆனாலும் அதையும் மீறி தமிழ் சினிமாவில் அவ்வப்போது நிகழும் அபூர்வங்களில் ஒன்றுதான் இந்தப் பாத்திரம். பார்த்த மாத்திரத்தில் உருவாகிவிடும் ஈர்ப்பை, ஒரு நவீன பெண்ணியல்புடன் எதிர்கெள்கிறாள் யாழினி. அறிமுகமாகும் பொழுதில் அவள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆறு இலக்க எண்ணிக்கையில் சம்பாதிக்கும் உயர் மத்திய தர வர்க்க பெண்தான். அயல் கலாச்சாரத்தின் (?) மாதிரியான ‘டேட்டிங்’ உறவில் நம்பிக்கை கொண்டவள். அதற்கு அவள் தேர்வு செய்திருக்கும் சுந்தரும் அதே வர்க்கத்தைச் சார்ந்தவன்தான். கார்த்திக்கின் வார்த்தை வன்முறைகளை அதே ரீதியில் எதிர்கொள்பவள். அவனது போதாமையை இனங் காண்பதும், நேரடியாகச் சொல்லி விடுவதும் அவளுக்கு எளிது. ‘குடிச்சிட்டு மேல மேல வந்து விழும்’ டேட்டிங் நண்பனை தயக்கமின்றி நிராகரிப்பவள். எந்தவிதமான பின்புலங்களுமற்ற, வெறும் கனவைத் துரத்துபவனை உறுதியாக மணம் செய்து கொள்கிறாள். கார்த்திக்கை அறிந்து கொள்ள அவளுக்கு ‘டேட்டிங்’ தேவைப்படுவதில்லை. அதன் பின்னரான மண உறவில் சாவித்திரி, நளாயினி பாணி பெண்ணாகி விடுகிறாள். அவனது கனவை அவனைப் போலவே நம்பத் தொடங்குகிறாள். வாழ்வின் இருளடர்ந்த காலங்களை உறுதியாகக் கடக்கிறாள். அடை காப்பதுபோல காத்துவரும், உறுதிப்பாடு குழைந்த நிலையில் அழுது விடும் அவளை அரவணைத்து மாற்றுவழி சொல்லும் நண்பனை வன்முறையாகத் தாக்கிச் சாய்க்கிறாள். ஒரு அரவணைப்பில் தொடங்கிய உறவு, இன்னொரு அரவணைப்பை வன்மமாக நிராகரிப்பதன் வழி உறுதிப்படுகிகறது. தாயின் வாஞ்சையுடன் காத்துவரும் கணவன் கருவின் அழிவிற்கு காரணமானதும், அவனை கடுமையாகத் தண்டிக்கிறாள். திரைப்படத்தின் இரண்டாவது பகுதியை வளப்படுத்துவதே யாழினியின் பாத்திரப் படைப்பே. தரையில் தோய்ந்து போன ரத்தக் கறையை அரக்கித் தேய்த்து வெடித்து அழும் யாழினியே, சுய கழிவிரக்கத்தில் படைப்பூக்கமற்ற கோழையாய் வீழ்ந்து கிடக்கும் கார்த்திக்கின் மீட்சிக்கும் காரணமாகிறாள்.
கார்த்திக், யாழினி, சுந்தர், தங்கை, சுந்தரின் அப்பா, நண்பர்கள் என்ற பாத்திரப் படைப்புகள் செயல் தளத்தில் வீர்யமாக இருந்தாலும், அவற்றின் நம்பகத் தன்மை மிக மிகக் குறைவே. செல்வராகவன் பாத்திரங்களையன்றி, வகைமைகளையே உருவாக்கியுள்ளார். சுந்தரின் அப்பா தவிர யாருமே அங்கு மூத்த தலைமுறையினராக இல்லை. அவரும் ஆகச் சிறந்த அப்பாவின் மாதிரி மட்டுமே. யாழினியின் பின்புலம் முற்றிலுமாக அடையாளம் இன்றி இருக்கிறது. கார்த்திக் அவனுக்கொரு தங்கை என்பது தவிர அங்கு யாரும் யாருக்கும் ரத்த உறவுகள் இல்லை. வகைமைகளின் மாதிரிகளை பாத்திரமாக்கியதன் பயன் விளைவு இயல்பு வாழ்வுத் தருணங்கள் அரிதாகி விடுகிறது. கார்த்திக் பாத்திரப் படைப்பில் அவன் ஒரு நிழற்படக் கலைஞனாக ஆவதற்கான எத்தனம் கொண்டவன் என்பதை விட ஒரு சினிமா உதவி இயக்குனர் வாய்ப்புத் தேடுபவனின் சாயல்தான் வெளிப்படுகிறது. மாதேஷிடம் உதவியாளனாக சேரத் தவிக்கும் தவிப்பு சினிமாத் துறையில் வாய்ப்பு தேடும் சாயலைக் கொண்டிருக்கிறது. கார்த்திக் ஒரு புகைப்படக் கண்காட்சிகூட வைப்பதில்லை என்பதை வேறு எப்படிப் புரிந்து கொள்வது. நிழற்படத் துறையின் தவிர்க்க முடியாத அம்சமில்லையா கண்காட்சி. நிழற்படக் கலைஞனின் கதை என்பதால் திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் இரவுக் காட்சிகளாகவும், லைட் அன்ட் ஷேட் காட்சிகளாகவுமே உள்ளன. பகல் நேரக் காட்சிகள் மிகஅரிதனாதாகவே இருக்கின்றன. இந்தக் கறாரான தேர்வு தினசரி வாழ்வின் தருணங்களை முற்றிலுமாகத் தவற விட்டு விடுகிறது.
ராஜன் குறை: சுபகுணராஜன் கடைசியாக கூறும் விஷயங்கள்தான் எனக்கு முக்கியமானதாக இருக்கிறது. புகைப்படக்கலையில் ஆர்வம் கொள்ளும் ஒருவருக்கு என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன, அவர் எவ்வாறெல்லாம் தன் திறமையை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்வார் என்பது போன்ற அம்சங்கள் படத்தை வழிநடத்தவில்லை. என்னதான் புகழ்பெற்றவர் என்றாலும் ஊரில் ஒரே ஒரு வைல்ட் லைஃப் போட்டாகிராபர்தான் இருப்பார் என்பதுபோல மாதேஷே கதியென்று தனுஷ் சுற்றுவது வேடிக்கையாக இருக்கிறது. மேலும் தன்னுடைய படத்தை அவர் பெயரில் பிரசுரித்துவிட்டார் என்பது ஏமாற்றத்தை தரும் அதே நேரத்தில் தன் திறமையைப் பற்றிய உறுதிப்பாட்டையும் அது அவருக்கு தரவேண்டும் இல்லையா? அந்த இடத்தில் அவருடைய முயற்சிகள் பல திசைகளில் பெருகவேண்டும். அவர் ஏன் தன் மனைவியிடமும், நண்பர்களிடத்திலும் அந்த முக்கியமான நிகழ்வை பகிர்ந்து கொள்வதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைவிட முக்கியமான ஒரு பிரச்சினையை பேசலாமா வேண்டாமா என்றே தெரியவில்லை. காரணம், சில சமயங்களில் நடைமுறை வாழ்விலிருந்து தனித்தியங்கும் சினிமா என்று தமிழ் சினிமாவை மன்னிக்கத் தோன்றினாலும், இது போன்ற படங்கள் ஒன்றும் கிராமத்து மக்களுக்காக எடுக்கப்படுவதில்லை. தங்களை மேதைகளாக கருதிக்கொள்ளும் செல்வராகவன் போன்ற விடலைத்தனம் மாறாத இயக்குனர்கள் கொஞ்சமும் திரைக்கதையில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை. அதனால் பிரச்சினையை சொல்லியேவிடுகிறேன். தனுஷ் காட்டில் அந்த பறவைகளை படம் எடுத்தது டிஜிட்டல் காமிராவில். அவ்வளவு அபூர்வமான புகைப்படத்தை நிச்சயம் அவர் கம்ப்யூட்டரில் தரவேற்றம் செய்து வைத்திருப்பார். அதை ஒரு ஸ்டுடியோவில் பிரிண்ட் போட்டிருக்கிறார். நண்பர்களிடம் காட்டியிருப்பார். இதையெல்லாம் மாதேஷ் கிருஷ்ணசாமி புகைப்படத்தை திருடுவதற்கு முன்னால் யோசிக்கமாட்டாரா? ஏற்கனவே புகழின் உச்சியில் இருக்கும் அவருக்கு இந்த திருட்டுத்தனம் செய்ய வேண்டிய தேவை என்ன? அப்படியே சந்தர்ப்பவசமாகத் திருடினாலும் தனுஷிற்கு ஏதாவது வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து சமரசம் செய்துகொள்ள பார்ப்பாரா, அதைவிட்டுவிட்டு அவரை விரோதித்துக்கொள்வாரா? தனுஷ் தன்னிடம் உள்ள பிம்பத்தை இணையத்தில் போட்டு, நண்பர்களின் சாட்சியத்தையும் போட்டு மாதேஷை சங்கடப்படுத்த முடியாதா? மாதேஷ் மான நஷ்ட வழக்கு போட்டாலும் கூட தனுஷிடம் போதுமான சாட்சியங்கள் இருக்குமே? திரைக்கதையை திருடுவதுபோல புகைப்படத்தை திருடுவது தேவையா, சாத்தியமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாமா? சரி அப்படியே ஒருவர் செய்தேவிடுகிறார் என்று வைத்துக்கொள்ளலாம். எந்த காரணத்தினால் தன் கலையின்மீது காதல் கொண்ட தனுஷ் அதற்காக வெகுண்டு எழாமல் துவண்டு போகவேண்டும்? தன் திறமைக்கு மறைமுகமாக கிடைத்த அங்கீகாரம் ஏற்படுத்தும் துணிவின் காரணமாக இன்னம் ஆர்வமாகத்தானே செயல்படவேண்டும்? இங்கு வேறு ஏதோ கலைவடிவத்தை யோசித்து செய்யப்பட்ட திரைக்கதை இறுதியில் தற்செயலாக புகைப்படக்கலையாக மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது. பொதுவாக அங்கீகாரம் கிடைக்காத கலைஞன் என்பதற்கான உருவகமாகத்தான் தனுஷ் கதாபாத்திரம் இருக்கிறதே தவிர புகைப்படக்கலை என்ற குறிப்பிட்ட கலையின் சூழலை பிரதிபலிப்பதாக இல்லை. புகைப்படம் என்ற அம்சத்தை எடுத்துவிட்டால் படத்தின் பிற இழைகள் பல்வேறு படங்களில் பார்த்ததாகத்தான் இருக்கிறது. உதாரணமாக தமிழ் சினிமாவில் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் எல்லோரும் முட்டாளாகத்தான் இருக்கவேண்டும் என்பது நியதியா என்ன? குடிகாரர்கள், மனநலம் குன்றியவர்கள் ஆகியோரால் வரும் பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக, புரிந்துணர்வுடன் கையாளும் நிர்வாகிகள் நாட்டில் இருக்கவே மாட்டார்களா? கூட்டமாகப் போய் கட்டப் பஞ்சாயத்து பண்ணுவதுதான் ஒரே ஸ்டைலா? பஞ்ச் பேக் போல துணைக்கதாபாத்திரங்கள் வீர வசனம் பேசுவதை வாங்கிக் கட்டிக்கொள்வதுதான் அவர்கள் விதியா? படமெடுக்கும்போதே இது போன்ற தேய்ந்துபோன (நீறீவீநீலீஙபீ) காட்சிகளை எப்படி அலுப்பில்லாமல் எடுக்கிறார்கள் என்பதே புரியவில்லை. நானும் மத்தியதர வர்க்க மனோபாவத்தின் கடுமையான விமர்சகன் என்பதுடன் என் வாழ்விலேயே நான் தனுஷ் கதாபாத்திரம் போல சில காலம் வாழ்ந்தவன். ஆனால் இப்படி ஃபார்முலாக் காட்சிகளை என் வாழ்வில் சந்தித்ததில்லை.
மோனிகா: புகைப்படம் விஷயத்தில் பல நகைச்சுவை சம்பவங்கள் நிகழ்கின்றன. குமுதம் பத்திரிகை ஒரு யானையை அட்டையில் போடுகிறது என்பதற்கும் மேலாக தனுஷ் ஆப்பிரிக்க யானையை இந்தியக் காட்டில் படம் எடுத்திருப்பது உச்சகட்ட சாதனையாக இருக்கிறது (யானையின் தந்தங்கள் சாதாரணமாய் காணப்பட்டாலும் காதுகள் இந்திய யானைகளைக் காட்டிலும் பெரியதாக உள்ளன). இந்தப் பிரச்சினையை கடந்து ஆண், பெண் உறவின் அம்சங்களைப் பற்றி சில விஷயங்களைக் கூற வேண்டியிருக்கிறது. ஜீனியஸ் என்பதே ஆணின் அடையாளமாகத்தான் பார்க்கப்படுகிறது என்பது ஒரு பிரச்சினை. ஆணின் மீது பரிந்துணர்வும், பெண்ணின் தியாகத்திற்கான பாராட்டுதலும் வினியோகம் செய்யப்படுவதில் இருக்கும் உள்ளார்ந்த ஓரவஞ்சனை வழமையானது (காலம் காலமாக தமிழ் படங்களில் கையாளப்பட்டுவரும் கதையாடல்தான் இது). இது குறிப்பிட்ட இரண்டு கதாபாத்திரங்களின் பிரச்சினையில்லை. அவர்களை பாலியல் சமன்பாடுகளின் உருவகமாகப் பார்த்தால்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கான தீர்வு பெண்களை குடிப்பவர்களாகவும், ஆண்களை அவர்களுக்காக தியாகம் செய்பவர்களாகவும் சித்தரிப்பது அல்ல. அந்தக் குடி, அதன் விளைவுகளை உண்மையிலேயே பெண்ணின் பார்வையில் சித்தரிக்க முடியுமா என்பதே கேள்வி. நான்கு படங்களில் அதை சாதித்துவிட்டால் எந்த ஆணும் குடிக்க மாட்டான். ஜீனியஸை புரிந்துகொள்வதும், ஜீனியஸின் குழந்தையை பிரசவிக்க முடியாததற்காக வருந்துவதையும் தவிர வேறு எந்தந்த நுண்ணுணர்வுகள் பெண்ணிடம் சாகடிக்கப்படுகின்றன என்பதை யோசிக்கவும் சாத்தியமற்றுத்தான் இதுபோன்ற கதையாடல்கள் அமைகின்றன. இரும்பு மனுஷி என்ற பட்டம் எரிச்சலூட்டுகிறது. இந்தப் படத்தில் அமைந்துள்ள காட்சிகளின் யதார்த்தம் ஒரு புறம் சரியாக இருந்தாலும், உதாரணமாக மனம் தளர்ந்த நேரத்தில் குடிகாரக் கணவனின் நண்பன் வாழ்க்கைத் துணையாக முயலும் காட்சியை சொல்லலாம், மறுபுறம் பெண்ணுக்கு கொடுக்கும் அனுதாபம். அவள் ஜீனியஸுக்காக செய்யும் தியாகத்தை நோக்கி திருப்பப்பட்டு அதன் காரணமாக ஒரு வெறும் துணைக்கதாபாத்திரமாக நிறுவப்படுகிறாள்.
ஸ்ரீகுமார்: என்னால் தனுஷ் பாத்திரம் உருவாக்கப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக முற்பாதிக்கும், படத்தின் பிற்பாதிக்கும் அவர் கதாபாத்திரத்தில் தொடர்ச்சியில்லாமல் இருக்கிறது. புகைப்படக்கலையில் அவ்வளவு ஆற்றலும் ஆர்வமும் கொண்ட அவர் எதற்காக முதலில் அநாகரிகமாக நடந்துகொள்ளும் முரடனாக இருக்கவேண்டும் என்று புரியவில்லை. ஒரு பெண்ணை முதல் முறையாகப் பார்க்கும்போதே “முண்டக்கலப்பை” என்று சொல்லும் அளவு கொச்சையான மனிதனாக நாகரீக சமூகத்தில் பழகும் ஒருவன் எப்படி இருக்கமுடியும் என்று புரியவில்லை. அவர்கள் ஒன்றும் பள்ளி மாணவர்களோ, கல்லூரி மாணவர்களோ கூட கிடையாது. பிற்பாதியில் அவர்களுக்கிடையில் நிலவுப்போகும் ஆழமான அன்பிற்கு முற்பாதியில் எந்த தயாரிப்பும் இல்லாமல் இருக்கிறது. தனுஷின் நண்பனை டேட் செய்யத் தொடங்கி தனுஷிடம் மனதை பறிகொடுப்பதும் நம்பும்படியோ, பரிவுகொள்ளும்படியோ இல்லை. அவரே பிற்பாதியில் அவ்வளவு பெரிய தியாகியாக உருவாவதும் சரியான தொடர்ச்சியுடன் இல்லை. பல விதங்களிலும் படத்தின் முற்பாதியும், பிற்பாதியும் ஒட்டாமல்தான் இருப்பதாகப் படுகிறது. மற்றபடி தனுஷின் நடிப்பு பல்வேறு காட்சிகளில் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஒரே சமயத்தில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றலுள்ளவராக அவர் உருவாகி வருகிறார்.
பா.வெங்கடேசன்: தனுஷ் ஒரு கலைஞனுக்குள்ள தவிப்பை வெளிப்படுத்துகிறார் என்பது சரிதான். ஆனால் முற்பகுதியில் அவருக்குக் கிடைத்த படைப்பெழுச்சி மிக்க தருணம் அவருக்கு மீண்டும் ஏன் வாய்க்காமல் போகிறது என்பது புரியவில்லை. அவர் காட்டில் புகைப்படம் எடுக்கும் காட்சி படத்தில் மிக அழகாக வந்திருக்கிறது. அது அவர் ​கை​யைவிட்டு நழுவிப்​போகும்​போது அ​தைவிட அற்புதமான தருணத்​தை ​இயக்குனர் எப்படிக் காட்டப்​போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு மிக அதிகமாக இருந்தது. அது மிகப்​பெரிய சவாலாக இருந்திருக்கும். உண்​மையில் தனுஷினு​டைய கதாபாத்திரம் அவன் வாழ்வில் அப்படிப்பட்ட படைப்பூக்கமான தருணங்க​ளை, ​தொடர்ச்சியாக அ​மையச் சாத்தியமில்​லை​யெனினும், அவ்வப்​போது எதிர்​கொள்ளும்படியான ஒன்றாகத்தான் துவக்கத்திலிருந்​தே காட்டப்பட்டிருக்கிறது. ​உதாரணமாக அந்த மூதாட்டி​​யைப் பு​கைப்பட​மெடுக்கும் காட்சி. முற்பாதியில் அந்த  அற்புதமான தருணமும், பிற்பாதியில் குமுதம் அட்​டைப்படம் மூலமாக அவருக்குக் கிடைக்கும் சர்வதேச அங்கீகாரமும் திரைக்கதையில் இடம்பெறுவது அவருக்கு கலைஞன் என்ற முறையில் நியாயம் செய்வதாக இல்லை. ப​டைப்​பை உருவாக்கும் ம​னோநி​லை​யேயன்றி அந்தப் ப​டைப்பல்ல அவரு​டைய சர்வ​தேச அங்கீகாரத்​தை படத்தின் பார்​வையாளர்க​ள் அங்கீகரிப்பதற்கான காரணம். அவருடைய சிறந்த படைப்பு களவாடப்பட்ட பிறகு, மீண்டும் ஒரு முறை அப்படிப்பட்ட படைப்பூக்கமிக்க தருணம் அவருடைய தாழ்வுணர்ச்சியிலிருந்து அவரை விடுதலை செய்யும் என எதிர்பார்த்தேன். அப்படி நடக்காதது ஏமாற்றமாக இருந்தது. கலையனுபவத்தை விட அங்கீகாரத்தையே முக்கியமாக கருதும் போக்கினை படம் வலுப்படுத்துவதாகத் ​தோன்றியது.

Saturday, December 10, 2011

ஏ.ஆர். முருகதாஸின் ஏழாம் அறிவும்-கால வேதாளத்தின் ஏழு கேள்விகளும் - தங்கவேலன்.


தமிழர்கள் இனிமேல் கர்வம் கொள்ளலாம் என்ற கர்வ முழக்கத்துடன் தனது ஏழாம் அறிவைக் காண்பித்திருக்கிறார் .ஆர். முருகதாஸ். போதிதர்மர் ஒரு தமிழர் என்கிற காரணத்தால் தமிழரும், வரலாற்றின் இருளடுக்குகளில் சிக்கிக் கிடந்த போதிதர்மரைத் துழழவியெடுத்து நிகழ்கால வெளிச்சத்தில் நிறுத்திய காரணத்தால் முருகதாஸீம் பெருமித மகுடம் சூடிக் கொள்ளலாம் என்பது பொருள். இந்தப் பெருமித மகுடத்தை எவர் சூடிக் கொள்வதாக இருந்தாலும், கால வேதாளத்தின் கேள்விகளுக்கு விடையளித்த பின்னரே சாத்தியம்.
1. முருகதாஸின் தமிழரும், முருகதாஸ் தமிழரும் பெருமிதம் கொள்வதற்கான தகுநிலையுடன் ஏழாம் அறிவு படைப்புரு கொண்டிருக்கிறதா?
2. ஏழாம் அறிவு, வரலாற்றுத் திரைப்படமா? வரலாற்றுத் திரைப்படம் என்றால் என்ன?
3. இப்பொழுது தமிழில் குபுக்கென மேலெழும்பி இருக்கும் வரலாற்றுத் திரைப்பட உருவாக்கம் என்கிற போக்கின் மூலம் எது? இந்த போக்கின் நோக்கம் என்ன? இந்தப் போக்கின் விளைவு என்னவாக இருக்கும்?
4. ஒரு தேசிய இனத்தின் நிலத்தில் படைப்புரு கொள்ளும் வரலாற்றுத் திரைப்படம் இரண்ட தேசிய இனங்களுக்குப் பொதுவான, அல்லது பல தேசிய இனங்களுக்குப் பொதுவான படைப்பாக அமைந்துவிட முடியுமா? (ஏழாம் அறிவு ஆந்திராவில் தெலுங்கு பேசுகிறது. தமிழ்ப் பெருமையைப் பேசுமா?)
5. குடும்பப் படம், காதல் படம், நகைச்சுவைப் படம், திகில் படம், சாகஸப் படம் ....... இவ்வகைப் படங்களை எடுப்பதற்கான படைப்புலக ஜனநாய உரிமை யாவர்க்கும் உண்டு என்பது போல, வரலாற்றுத் திரைப்படம் எடுப்பதற்கான படைப்புலக ஜனநாயக உரிமை யாவர்க்கும் உண்டா?
6. ஏழாம் அறிவு என்றால் என்ன? (சன் தொலைக்காட்சியில்டி.என்.என்று விடையளித்திருக்கிறார் முருகதாஸ்) ஏழாம் அறிவுக்கும் போதி தர்மருக்கும் என்ன தொடர்பு? ஏழாம் அறிவுக்கும் முருகதாஸீக்கும் என்ன தொடர்பு?
7. கடந்த காலத்தில் கனவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்பட்டு வந்த திரைப்படத் தொழிலை, பொழுதுபோக்குத் தொழில் துறை (Entertainment Industry) என்று சுட்டுகிறது உலகமயமாக்கல். இரும்பு வணிகத்தை முதன்மையாகக் கொண்ட லஷ்மி மிட்டல் போன்ற அசுர முதலாளிகளும்பொழுது போக்குத் தொழில் துறைக்குள்நுழைந்து தத்தம் வியூகத்தின்படி காய்கள் நகர்த்தி விளையாடும் சதுரங்க ஆட்டத்தில் .ஆர். முருகதாஸ் என்கிற தமிழர் எவருடைய காய்? இந்தக் காயை நகர்த்தி ஆடும் மாயக்கரம் எது?
மேற்கண்ட ஏழு கேள்விகளை விடுத்திருக்கிறது கால வேதாளம். கால வேதாளத்தின் தொழில் புதிர்களைப் போடுவதும், புதிர்களை அவிழ்ப்பதும், புதிருக்கு நியாயமான விடை சொன்னவர்க்குப் பரிசளிப்பதும், அல்லாதவர்க்கு தண்டனையளிப்பதும்...... ஒரு பொழுதும் ஓயாது தொழில் புரியும் கால வேதாளம் எதையும் விட்டு வைத்ததில்லை; எவரையும் விட்டு வைத்ததில்லை. ஏனெனில், கால வேதாளம் அறத்தின் பேரரசன்.
போதிதர்மர் எங்கள் தமிழர்என்ற பெருமித மகுடத்தை எவர் சூடிக் கொள்வதாக இருந்தாலும், கால
வேதாளத்தின் கேள்விகளுக்கு நியாயமான விடை சொல்ல வேண்டும். சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யர்கள் இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லி விட்டு முப்பத்தியிரண்டு படிகள் ஏறி சிம்மாசனத்தில் அமர்ந்து மகுடம் சூடிக்கொள்ளலாம். நியாயமான விடை சொன்னவரின் தலைக்கு மகுடம். அல்லாதவர்க்கு என்ன நடக்கும் என்பதை பட்டி விக்ரமாதித்யன் கதை தெரிந்தோர் அறிவர்.
வேதாளத்தின் கேள்வி ஒன்று:
முருகதாஸின் தமிழரும், முருகதாஸ் தமிழரும் பெருமிதம் கொள்வதற்கான தகுநிலையுடன் ஏழாம் அறிவு படைப்புரு கொண்டிருக்கிறதா?
முருகதாஸின் பிரகடனத்திலிருந்து துவக்குவோம். கர்வம். போதிதர்மர் எங்களவர் என்று தமிழர் கர்வம் கொள்ளலாம். போதிதர்மருக்கு உயிரூட்டியதால் முருகதாஸ் கர்வம் கொள்ளலாம்.... என்பது பொருள். போதி தர்மரால் சீனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மகாயானப் பிரிவின் பிரம்மஜால சூத்திரங்களுள் ஒன்று., ‘தன்னைப் போற்றிப் பிறரைச் சிறுமைப்படுத்தாதிருத்தல்’,
போதிதர்மர் தமிழர் இனம்என்று மார்தட்டிக் கொள்ளும் அகந்தை, பிற இனங்களைச் சிறுமைப் படுத்துகிறது. இது போன்ற சிறுமைத் தனங்களிலிருந்து விடுபட்ட துறவி போதிதர்மர். போதி என்பது பௌத்த நிலை. பௌத்தம் என்பது அகந்தை அழிந்து, எண்ணங்களகன்று, காலம் கரைந்து அடையாம் ஏதுமற்ற ஆற்றலின் பூரண விழிப்பு நிலை. அந்நிலையில் ஏது தமிழன், தெலுங்கன், மராட்டியன்....? தன்மயம் அறுத்துப் பிரபஞ்சப் பேராற்றலுக்குள் தன்னைக் கரைத்துக் கொண்ட பேராளுமை அவர். அத்தகு ஆற்றலைத் தமிழ்க் குப்பிக்குள் அடைத்து மினுமினு லேபிள் ஒட்டித் தெரு யாவாரி போல்இவர் எங்க ஆள்.... இவர் எங்க ஆள்என்று கூச்சலிட்டுப் போகிறவருக்கு போதிதர்மரின் மூல ஆற்றல் எப்படி விளங்கும். பிரபஞ்ச ஆற்றலை ஒரு சின்னக் குப்பிக்குள் அடைத்துத் தனதாக்கிக் கொள்ள முடியாது என்கிற அளவிற்காவது ஒரு பேஸிக் காமன் ஸென்ஸ் வேண்டாமா?., ஸெவன்த் ஸென்ஸைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!
துறவியாகப் புறப்பட்டுத் தனது நாட்டெல்லையை நீங்கியவர் போதிதர்மர். மனிதர்களின் அகந்தையும், உடைமைப் பற்றும் போதிதர்மரின் வாழ்க்கையில் விளையாட்டுக் காட்டியபோது மிக நுட்பமாக வாழ்வின் சிக்கல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட எளிய மனிதர் அவர். தன்மயம் அவிந்த நிலையில் பேரண்டத்தின் குழந்தையாகத் தன்னை வரித்துக் கொண்டவரைத் தமிழ்க் குப்பிக்குள் அடைத்துவிட முடியாது.
இன்று உலஎகங்கும் பரவிக் கிடக்கிற குங்ஃபூ கலையின் மூல ஆசான் போதிதர்மராகிய பழந்தமிழர் என்ற வரலாற்று உண்மையைத் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்ததாகச் சொல்லி கர்வம் கொள்கிறார் முருகதாஸ். இப்படி ஒரு மினி மெஸேஜைச் சொல்வதற்குச் சீனா வரை போய்வந்து இரண்டேகால் மணி நேரம் ஓட்டிக் காட்ட வேண்டுமா? பட்டென்று கைபேசி பட்டனைத் தட்டினால் பலநூறு குறுஞ்செய்தி பலவூரும் பறக்குமே! ஒரு முழுநீளத் திரைப்படத்தில் இந்த ஒரு செய்தியைத் தவிர வேறெதுவும் போதிதர்மரின் உயர்வை விளக்குகிறாற்போல் இல்லை.
போதி தர்மர் வாழ்ந்த காலத்தைப் படம் பிடித்திருக்கிறார்கள் முதல் இரண்ட ரீல்களில். மூன்றாவது ரீலில் தற்காலத்துக்குத் தாவி விடுகிறது கதை. பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய போதிதர்மரின் டி.என்.-வைச் சுமந்து திரிகிற அரவிந்தன் அப்படியொரு கேணயனாக வலம் வருகிறான். மொத்தப் படத்தில் எங்கேயுமே போதிதர்மரின் மனோநிலை அறவே இல்லை. பல்லவ நாட்டில் விடைபெற்று சீனாவைச் சென்றடைந்த போதிதர்மரை, துறவுடைக்குள் ஒளிந்திருக்கும் அகந்தையாளனாகத்தான் காண்கிறோம். தன்மயமறுத்த போதிதர்மரின் தன்னடக்கம் இல்லை. கதாபாத்திரத்தின் மனோநிலையை இயக்குநரின் பற்றாக்குறை, போதிதர்மரை ஒரு சாகஸக்காரராக, அகந்தையாளராகச் சித்தரிக்கிறது. முருகதாஸின் மனோநிலையும் பௌத்தஞானியின் மனோநிலையும் வேறானவை. கீழைத்தேய ஞான மரவில் தோண்ந்தெழுந்த தூய கலையுள்ளத்தினால் மட்டுமே இத்தகைய கதாபாத்திரத்தின் மனோநிலையை உய்த்துணர்ந்து உருக்கொடுக்க முடியும். படைப்புலகின் அடிப்படை நியதி இது. அழிவற்ற பேருண்மையின் ஒளியுருவை இருட்கண்களால் கண்டுணர முடியாது.
சீனர்களுக்கு போதிதர்மர் தமிழரின் போர்க் கலையைக் கற்றுக் கொடுக்கும் காட்சி ஹீரோவுக்கான சாகஸக் காட்சியாகத்தான் சித்தரிக்கப்படுகிறது. நோக்கம் என்னவெனில், தமிழர்கள் கர்வம் கொள்ள வேண்டும் என்பதே, இதனடியில் தமிழ் நிலம் சார்ந்த அரசியல் அக்கறை ஏதுமில்லை. ‘நான் தமிழன்என்ற சுயசாப்புப் பற்று தூண்டிவிடப்படுகிறது. ‘தமிழ்ப் பற்றுசந்தைக்கான கச்சாப் பொருளாகக் கையாளப் படுகிறது. போதிதர்மர் போர்க்கலையைக் கற்றுத் தருகிற அந்தக் காட்சியில், போர்க்கலை விதிகளின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் தத்துவப் பார்வை மெல்லிய கீற்றளவிலும் வெளிப்படவில்லை. ஞானம் எய்துவதற்கான வழிமுறைகளுள் ஒன்றாகப் போர்க் கலையைப் பணின்ற, பயிற்றுவித்த தமிழ் மெய்ஞான மரபின் ஆன்மீகத் தாதுக்கள் தட்டுப்படவில்லை. பிறனைத் தோற்கடிப்பதற்கான வித்தை என்ற பொருளில்தான் காட்சியாக விரிகிறது.
ஒரு சண்டைக் காட்சியின் போது போதிதர்மன் எதிரியை உற்று நோக்க, எதிரி உறைந்து விடுகிறான். போர்க் கலையில் கையாளப்படும் அந்த வித்தை நுணுக்கத்தின் பெயர்நோக்கு வர்மம்என்ற தகவலும், நோக்குவர்மம் என்றால் மனோவசியம் என்ற விளக்கமும் இயக்குநரால் வழங்கப்படுகின்றன. கதை தற்காலத்திற்குள் குதித்த பின்னர், அதே நோக்குவர்மத்தைப் பயன்படுத்துகிற சீன வில்லன் பலரையும் மனோவசியம் செய்து கொடுஞ்செயல்கள் புரிகிறான்
உண்மையில் நோக்குவர்மம் என்பது எதிரியைத் தனது கட்டளைப்படி ஆட்டுவிக்கும் மனோவசியம் அல்ல. நோக்குவதையே வர்மமாக - அதாவது தாக்குமுறையாகக் கையாளுதல் என்பதே உட்பொருள். எதிரியை அழிப்பதோ எதிரியைத் தோற்கடிப்பதோ, எதிரியைத் தனது இச்சைக்கு உகந்தபடி ஆட்டுவிப்பதோ அல்ல நோக்குவர்மத்தின் இலக்கு. எதிரியை முடக்குவது மட்டுமே. எப்படி முடக்குவது? பார்வையால்! எதிரியை நோக்குவதன் வழியாக, எதிரியின் எண்ண இயக்கத்தை நிறுத்துவது. எண்ண இயக்கம் நின்ற கணத்தில் மனம் அசைவை நிறுத்திக் கொள்கிறது. எண்ண இயக்கமற்ற மனதுள் - அசைவற்ற மனதுள் - வேர்விட்டு நிற்கும் அகந்தை, தன்மயச் சாற்றினை உறிஞ்ச முடியாமல் அடிவெட்டு விழுந்த மரமென வேரொடு சாயும். எதிரியின் வன்முறைச் செயல்பாடு - அகந்தை- முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. இனிப் போர் இல்லை. இந்தப் போரில் வென்றவர் இலர்; தோற்றவர் இலர். எவரும் வென்றிடாமல், எவரும் தோற்றிடாமல் முடிவுக்கு வருகிறது போர். எவரும் தோற்கவில்லை; போர் தோற்றுவிட்டது. இப்படியாக ஒரு போரை சண்டையை - முடிவுக்குக் கொண்டு வரும் ஆன்மீக வழிமுறையே நோக்குவர்மம். எவனையாவது உற்று நோக்கி, ‘எனக்கு ஆகாதவனைக் கொன்று விட்டு வாஎன்று கட்டையையிடுகிற மனோவசிய வழிமுறையல்ல நோக்குவர்மம். நோக்குவர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் எதிரியை, வர்மப் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் வல்லமையானது, நோக்குவர்மத்தை எவர் பிரயோகித்தாரோ அவரிடமே தங்கியிருக்கிறது. வேறு எவராலும் பிடியிலிருந்து விடுவித்துவிட முடியாது. பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட எதிரி இனி ஒருபோதும் சண்டை மேற்கொள்ள மாட்டான். தானே பெருவலிமை கொண்டவன் என்கிற அகந்தை வெட்டுப்பட்டு விட்டது. நோக்குவதாலேயே ஒருவர் தன்னை முடக்க முடியுமெனில், நோக்குபவர் தன்னைவிட வலிமையானவர் என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் நிற்கும் எதிரி சிறுமைப்படுகிறான். தன்னை வென்ற பேராற்றலிடம் அகந்தை சரணடைகிறது. வென்றவர் தோற்றவரிடம் பரிவு காட்டுகிறார். வெற்றியும், தோல்வியுமற்ற, அகந்தையும் - வன்முறையுமற்ற இயல்வு நிலையில் வாழ்வைத் தரிசிப்பதற்கான ஞானம் போதனையாகச் செலுத்தப்படுகிறது தோல்வியுற்றவருக்குள். இங்கு வென்றவர் குருவாகவும், தோற்றவர் சீடராகவும் தமது உள்ளுறவைத் துவக்க - துவங்குகிறது ஓர் ஆன்மீகப் பயணம். நோக்குவர்மத்தின் தாத்பர்யம் இந்த வகை ஆன்மீக விழிப்புதான். போர்க்கலைப் பயிற்சி முறையின் ஞானச் சிகரத்தில் -ஏழாவது நிலையில்- ஏறி நிற்பவருக்கே நோக்குவர்மம் சித்தியாகும்.
பௌத்தத்தின் வஜ்ராயணம் என்கிற பிரிவில்உபாயம்என்கிற சட்டகத்துள் நோக்குவர்மமும் பொருந்தி நிற்கிறது. உபாயம் என்பது ஒருவரை போதி நிலைக்கு உய்விக்கும் வழிமுறை என்று பொருள் பெறும். போதி நிலை என்பது பௌத்த நிலை. பௌத்த நிலை - மனதின் நிர்வாணம். எண்ணமற்ற, காலமற்ற, தன்மயமற்ற நிலையில் பிரபஞ்சப் பேராற்றலின் ஒழுகுவழியென மனமிருக்கும் நிலை. எவராலும் இந்த நிலையை எய்த முடியும் என்பது மகாயானக் கோட்பாடு. எனவே ஒவ்வொருவரும் தத்தமக்கு ஏற்ற வழிமுறைகளைக் கைக் கொண்டு போதி நிலையை எய்துறலாம். (நிகழ் கணத்தில் இயங்கும் விழிப்பு நிலையே ஞானம் என்பதைத் தனது மூலச் செய்தியாக அறிவித்தவர் ரமண மகரிஷி. ஆனாலும் தன்னை நாடி வரும் பல படித்தரங்களைக் கொண்டவர்களுக்கும், அவரவர்க்குத் தக்க வழி முறைகளைக் கண்டடைந்து, அந்தந்த வழிகளில் திருப்பி விட்டவர்) போர்க்கலையில் ஆற்றல் கொண்டோரை போதி நிலைக்குத் திருப்பி விடும் உபாயமே நோக்குவர்மம்.
நோக்குவர்மத்தை எல்லா எதிரிகள் மீதும் பிரயோகிப்பதில்லை. எதிரிகளில், தகுதி கொண்டோர் மட்டுமே நோக்குவர்மத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அதாவது, போதிநிலையை எய்துவதற்கான ஆற்றலை உள்ளீடாகக் கொண்டிருப்போர் மீதே நோக்குவர்மம் பிரயோகிக்கப்பட வேண்டும். அதற்கான தகுதி - சுயவலிமைப் பெருக்கு கொண்ட அருந்திறன். அவனிடம்தான் பேரகந்தை உருத்திரண்டு நிற்கும். போர்க் கலையில் மேற்கொண்ட தொடர் பயிற்சியாலும், தன்முயற்சியாலும் திறனை வளர்த்துக் கொண்டவனிடம் ததும்பி வழியும் பெருமிதம் திரண்டு பேரகந்தையாக உருக்கொண்டிருக்கிறது. இந்த அகந்தை வலிமை கொண்டு வலிமை கொண்டு உச்ச நிலையை அடையும்போது, எல்லாச் சிக்கல்களுக்கும் மூலவேர் அகந்தையே என்ற பேருண்மை பிடிபடும். தனது அகந்தை தனக்குள் மட்டுமின்றி தனக்குப் புறத்தேயும் பூசலை, பிளவை உண்டு பண்ணுகிறது என்ற எளிய உண்மை உடனடி அனுபவமாக வாய்க்கும் தருணமிது. இத்தகையோர் மீது மட்டுமே நோக்குவர்மம் பிரயோகிக்கப்படலாம். பலவீனமானவர்கள் மீதல்ல. சுயவலிமை எதுவுமற்ற, அருந்திறன் எதுவுமற்ற பலவீனர்களின்தான்உள்ளீடற்றது. அகந்தையின்ஆதிக்கவேட்கை மட்டுமே அந்ததானில்தவித்து விளையாடும். எனவே சுயவலிமையையோ, அருந்திறனை உள்ளீடாகக் கொண்டிராத பலவீனர்கள் மீது நோக்குவர்மத்தைப் பிரயோகிப்பதால், பலவீனர்களுக்குப் பயனொன்றும் இல்லை. பிரயோகத்திற்கு ஆட்பட்டு வர்மப்பிடியில் கட்டுண்ட பலவீனன் வர்மப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அச்சத்தின் காரணமாகத் தெறித்து ஓடுவானே தவிர, உள்ளீடான அருந்திறனும், பெருவலிவும் கொண்டவனைப் போல் சரணாகதி அடைந்துவிட மாட்டான். சரணாகதி அடைந்தவனைத் தான் - அகந்தையிலிருந்து விடுபட்டவனைத் தான் - ஆன்மீக மலர்ச்சிக்குத் தயார்படுத்த முடியும். எனவே நோக்குவர்மத் தாக்குதலுக்குப் பெருவலிமை கொண்டவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படுகிறார்.........இன்னும் படிக்க.... 
www.kaatchippizhai.com